சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் இயங்கி வரும் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலையில் அரவைக்காக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பின் அளவு குறைந்ததற்கான காரணம் என்ன? என்பதை அறிய கரும்பு அபிவிருத்தி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கரும்பு கோட்ட அலுவலகங்களில் நேற்று முன்தினம் களஆய்வு செய்தனர். அதன்படி எறையூர் அரசு சர்க்கரைஆலைக்கு கரும்பு கொள்முதல் செய்யப்படும் அரியலூர் தாமரைப்பூண்டி மற்றும் பெரம்பலூர், வி.களத்தூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட 8 கரும்பு கோட்ட அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் கரும்பு உற்பத்தி குறைந்தது குறித்து திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால் ஆலையை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதா? என விவசாயிகள் சந்தேகமடைந்தனர்.

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காகவும், எறையூர் சர்க்கரை ஆலையின் நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துவதற்காகவும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை விவசாய சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக சர்க்கரைத்துறை ஆணையரும், நிர்வாக இயக்குனருமான மகேசன் காசிராஜன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாரிமுத்து வரவேற்று பேசினார். விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு எறையூர் அரசு சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல் படும். அதற்கு கரும்பு விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சர்க்கரைத்துறை அதிகாரிகள் கூட்டத்தின் போது தெரிவித்தனர்.

கரும்பு நிலுவைத்தொகை

அதன் பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், வரலாறு காணாத வறட்சியின் காரணமாக கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. மேலும் 2015-16, 2016-17-ல் ரூ.20 கோடி வரை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் கரும்பு பயிரிட முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே நிலுவைத்தொகையினை விரைந்து வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டு அரவை பருவத்திற்குள் எறையூர் சர்க்கரை ஆலையில் இணைமின் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான அரவை பருவத்தில் விவசாயிகளின் கரும்புகளை அரைத்து கொடுக்கும் பொறுப்பினை ஆலை நிர்வாகம் ஏற்று கொள்ள வேண்டும். மேலும் வறட்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக சர்க்கரைத்துறை ஆணையர் மற்றும் கலெக்டரிடம் அளித்தனர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினர்.

ஆலையை நவீனப்படுத்தி...

இந்த கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட செயலாளர் செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், மாணிக்கம், வேணுகோபால், அன்பழகன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சர்க்கரைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். எறையூர் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி கரும்பு அரவை துரிதப்படுத்தப்படும். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக இனி வரும் காலங்களில் கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்படும் என தமிழக சர்க் கரைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com