இறந்து போனதாக கூறப்பட்ட தொழிலாளி உயிர் பிழைத்த அதிசயம்

இறந்து போனதாக கூறப்பட்ட தொழிலாளி உயிர் பிழைத்த அதிசயம் கறம்பக்குடியில் நடந்துள்ளது.
இறந்து போனதாக கூறப்பட்ட தொழிலாளி உயிர் பிழைத்த அதிசயம்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி துளைமான்நகரை சேர்ந்தவர் தங்கையா (வயது 55). துப்புரவு தொழிலாளி. இவர் அ.தி.மு.க. வார்டு மேலமைப்பு பிரதிநிதியாகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கையாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் தங்கையா இறந்து விட்டதாக நினைத்த அவரது உறவினர்கள் கறம்பக்குடியில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அவரை அமரர் ஊர்தியில் ஏற்றி கறம்பக் குடிக்கு கொண்டு வந்தனர். தங்கையா இறந்தது குறித்து அறிந்ததும், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் தங்கையாவின் வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக கூடி இருந்தனர். மேலும் கறம்பக்குடி பகுதி முழுவதும் தங்கையா இறந்தது குறித்து பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.

உறவினர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் கறம்பக்குடிக்கு கொண்டு வரப்பட்ட தங்கையாவின் உடலை அமரர் ஊர்தியில் இருந்து இறக்கியபோது, தங்கையாவின் உடலில் அசைவு ஏற்பட்டதை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்கையாவிற்கு இருமலும் ஏற்பட்டு, வாயில் ரத்தமும் வடிந்தது. இதன் பின்னரே தங்கையா உயிருடன் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து உடனடியாக தங்கையாவை ஒரு வேனில் ஏற்றி உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com