தமிழக அரசு தனது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

தமிழக அரசு தனது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே.வாசன் பேசினார்.
தமிழக அரசு தனது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது
Published on

திருச்சி,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசியலில் சூறாவளி ஏற்பட்டு இருக்கிறது. சுனாமி தாக்கி இருக்கிறது. வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் த.மா.கா. கட்சி தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. இது ஒரு நாணயமான இயக்கம் என்று மக்களிடம் பெயர் பெற்றுள்ளோம். த.மா.கா. இதுவரை எந்தவித குற்றச் சாட்டுக்கும் உட்பட்டது இல்லை என்று மார்தட்டி சொல்கிறேன். இதுவே நமது இயக்கத்தின் முதல் சாதனை. அனைத்து தரப்பினரும் நம்மை உற்றுப்பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். இது பணம், பதவிக்காக நடத்தப்படுகிற இயக்கம் அல்ல. மக்கள் இதை நன்கு புரிந்து இருக்கிறார்கள்.

வரும் காலங்களில் த.மா.கா.வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் 3 ஆண்டுகளில் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

நதிநீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறோம். நாம் எப்போதுமே ஒரு சார்புநிலை எடுத்தது கிடையாது. கடந்த காலம் ஏமாற்றம் நிறைந்தது. அதை தாண்டி மக்கள் பணியாற்றி இருக்கிறோம். வருங்காலம் த.மா.கா.வுக்கு வசந்தகாலமாக வரப்போகிறது.

ஜனநாயகத்தில் ஆளுகிற கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் இருவேறு கடமைகள் உண்டு. ஆட்சி செய்ய வேண்டியது ஆளுங்கட்சி. அதனை கண்காணிக்க வேண்டியது எதிர்க்கட்சி. தற்போது த.மா.கா. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டு இருக்கிறது.

பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் செயல்பாட்டால் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு தனது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து நிற்கும் பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினைக்காக மத்திய அரசிடம் வலுவான குரலை கொடுக்க தயங்குகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இருந்தபடியே சாதித்தார். ஆனால் இப்போதுள்ள அமைச்சர்கள் அனைவரும் டெல்லிக்கு படையெடுத்தாலும், மத்திய அரசு தமிழகத்தை திரும்பி பார்க்கவில்லை.

மது இல்லா தமிழகம் வேண்டும், மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். தரமான கல்வி, இலவச மருத்துவ வசதி, சாதி, மத மோதல்கள் தடுக்கப்பட வேண்டும். இந்தநிலையை தமிழகத்தில் த.மா.கா. ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com