பிரதமர் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு

பிரதமர் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பிரதமர் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
Published on

துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் பாஜ.க இருந்தது. இந்த முறை பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ, மட்டுமின்றி அமைச்சர்களாகவும் தமிழக சட்டசபைக்கு செல்வார்கள். மும்மொழி கல்வி கொள்கையை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது ஒரு மொழியை கற்று கொள்வதில் தவறு இல்லை.

புதிய கல்வி கொள்கை தாய் மொழி கல்வியையும், தொழில் கல்வியையும் ஊக்குவிக்கின்றது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ, மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழி கல்வி உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும்தான் மும்மொழி கல்வி இல்லை. இதனால் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னொரு மொழி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. மேலும் பிரதமர் திட்டமான, கிஷான் திட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைதேர்தலுக்கும் பா.ஜனதா கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவகங்களில் பாரத பிரதமர் படம் வைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைந்து செயல்படுத்தவேண்டும். கோவையிலுள்ள குளம், குட்டைகளை கழிவுநீர் கலக்காமல் தூய்மைபடுத்தவேண்டும். கோவையிலுள்ள முக்கிய சாலைகளை அகலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நடமாடும் நூலகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com