

கிருஷ்ணராயபுரம்,
கரூர் அருகே ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் குடோன் உள்ளது. இதில் இருந்து டீசல், பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நோக்கி நேற்று காலை புறப்பட்டு சென்றது. லாரியில் டேங்கரின் உள்பகுதியில் 2 தடுப்புகள் வைத்து அதில் ஒன்றில் 8 ஆயிரம் லிட்டர் டீசலும், மற்றொருபுறம் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும் இருந்தது. இந்த நிலையில் லாரி மாயனூரில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பெட்ரோல் பங்க் அருகே சாலையில் தடுப்பு கம்பிகளை கடந்து செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கரில் இருந்த டீசல், பெட்ரோல் வெளியே கொட்டி ஆறாக ஓடியது.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் கரூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். லாரி தீப்பிடிக்காத வகையில் அதன்மேல் ரசாயன பவுடர் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த நிலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல், பெட்ரோல் ஓடுவது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வாளி, கேன்கள், பாட்டில்களை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தனர். டேங்கரில் இருந்து வெளியே ஓடிய டீசலும், பெட்ரோலும் கலந்த நிலையில் இருந்தது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு கேன்கள், வாளிகள், பாட்டில்களில் பிடித்து சென்றனர். 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் பலர் நிரப்பி சென்றனர்.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். டேங்கர் லாரி கவிழ்ந்ததில் தீப்பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் நேற்று வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்ததால் எளிதில் தீப்பிடிக்கவில்லை. கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் ஊழியர்கள் தூக்கி நிறுத்தினர். இந்த விபத்தால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.