ஆக்கிரமிப்புகளை தடுக்க நடைபாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது அமைச்சர்-கலெக்டர் ஆய்வு

ஆரணி காந்தி வீதியில் மீண்டும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடைபாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடைபயிற்சிக்காக மேம்படுத்தும் பணி ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடக்கிறது. இதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை தடுக்க நடைபாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது அமைச்சர்-கலெக்டர் ஆய்வு
Published on

ஆரணி,

ஆரணி காந்தி வீதியின் சாலையோரத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள் ஆக்கிரமித்து பழக்கடைகளை நடத்தினர். இதனால் நடைபாதையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 6-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

அதன்பின்னர் சாலையோரத்தை பழ வியாபாரிகள் ஆக்கிரமிக்க முயல்வதும், போலீசார் அங்கு வரும்போது அவர்கள் அங்கிருந்து பொருட்களுடன் ஓடுவதும் தொடர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர்கள் தங்களுக்கு சாலையோரமே இடம் ஒதுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என நகராட்சி ஆணையாளர் சவுந்தர்ராஜன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் காந்தி ரோட்டில் வியாபாரிகள் சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க சாலைக்கும் நடைபாதைக்கும் இடையே இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் அந்த நடைபாதையில் நடைபயிற்சி செல்வோருக்கு வசதியாக தளம் அமைக்கவும் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. காந்திரோடு வடக்கு மாடவீதி முகப்பிலிருந்து அண்ணா சிலை வரையும், மண்டிவீதியில் தனியார் வங்கி வரையும் மொத்தம் 1600 மீட்டர் தூரத்துக்கு 3 அடி அகலத்துக்கு தடுப்புகள் மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்கப்பட உள்ளது. தற்போது எம்.ஜி.ஆர்.சிலை அருகே இந்த பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகின்றன.

இதனை பார்வையிடுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் நேற்று காலை 8 மணிக்கு பணிகள் நடக்கும் இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்நாதன், உதவி கோட்ட பொறியாளர் சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், நகராட்சி ஆணையாளர் சவுந்தர்ராஜன், திருவண்ணாமலை தீப திருவிழா பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பயிற்சி கலெக்டர்கள் உள்ளிட்டோரும் வந்தனர்.

பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர்கள் தடுப்புகளை உறுதியான முறையில் அமைக்க ஆலோசனைகள் வழங்கினர். மேலும் தடுப்புகள் போடப்பட்டதை வசதியாக எடுத்துக்கொண்டு கடைக்காரர்கள் கூரைபோட்டு இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது எனவும், அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதேபோல் கோட்டைமைதானத்தில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபயிற்சியாளர்களுக்காக நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருவதையும் பார்வையிட்டனர். இந்த பணிகளுக்கு கூடுதலாக ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com