வாழ்க்கையில் முன்னேற ஏணியாக இருந்த ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்

வாழ்க்கையில் முன்னேற ஏணியாக இருந்த ஆசிரியர்கள் காலில் விழுந்து திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வணங்கியது நெகிழ்ச்சி அடைய செய்தது.
வாழ்க்கையில் முன்னேற ஏணியாக இருந்த ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்
Published on

கரூர்,

மாதா, பிதா, குரு ஆகியோரை தெய்வமாகவும், 3 பேருக்கு அடுத்ததாக தெய்வத்தை வணங்குபவர்கள் அதிக அளவில் உண்டு. இதில் மாதா, பிதா, குருவால் வளர்ச்சி அடைந்தவர்கள் என்றும் மறவாமல் தங்களது நன்றியை மனதில் வைத்திருப்பார்கள்.

அந்த வகையில் ஆசிரியர்களால் உயர்ந்த நிலையை அடைந்ததால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கரூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிரியர்களை வணங்கியது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கரூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை சிவில், மெக்கானிக், டெக்ஸ்டைல் பாடப்பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

இதில் திருச்சியை சேர்ந்த வரும், முன்னாள் மாணவருமான திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி உள்பட 45 பேரும், அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த முன்னாள் ஆசிரியர்கள் 8 பேரும் பங்கேற்றனர். 31 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி என்பதால் ஆர்வமுடன் ஒருவரையொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

தன்னுடன் படித்த மாணவர் ஒருவர் கலெக்டராக இருப்பதை எண்ணி சக தோழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கலெக்டர் கந்தசாமியும் அன்று ஒரு நாள், தான் கலெக்டர் என்பதை மறந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போல நண்பர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரியையும், வகுப்பறைகளையும் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். கல்லூரியில் இருந்து ஓட்டலுக்கு கல்லூரி பஸ்சில் நண்பர்களுடன் பயணம் செய்தார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனையும் நிகழ்ச்சிக்கு அழைத்து சிறப்பு செய்தார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி பேசுகையில், ஆசிரியர்களால் நான் இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஆசிரியர்கள் ஏணிகளாக இருந்து நம்மை உயர்த்தி விட்டு அழகு பார்க்கின்றனர். கேட்காமலே வரம் கொடுத்த தெய்வங்கள் இவர்கள். இவர்களுக்கு நான் கைமாறாக என்ன செய்ய முடியும். என்ன செய்தாலும் அது நிலையானதாக இருக்காது என்றவர், திடீரென மேடையில் இருந்த முன்னாள் ஆசிரியர்கள் சதாசிவம், பழனிசாமி, அய்யாசாமி, அன்பழகன், முருகேசன், கந்தசாமி, பாலசுப்பிரமணியன், நரசிம்மன் ஆகியோரை சற்று எழுந்திருக்கும் படி கூறினார். அப்போது மேடையில் சாஷ்டாங்கமாக ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முன்னாள் ஆசிரியர்கள் கண் கலங்கினர்.

கலெக்டரை உடனே எழுமாறு 2 பேர் தூக்கினர். கலெக்டர் கந்தசாமியால் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது. அருகில் இருந்த முன்னாள் மாணவரான பொறியாளர் சிவக்குமார் உடனே கலெக்டரை சற்று ஆசுவாசப்படுத்தி அவரது செயலை பாராட்டியும், ஆசிரியர்களை மறக்காமல் இருப்பது குறித்தும் பேசினார். ஆசிரியர்களை மறக்காமல் கலெக்டர் கந்தசாமி அவர்களது காலில் விழுந்து வணங்கியது மற்ற முன்னாள் மாணவர்களையும், அரங்கத்தில் இருந்தவர்களையும், ஆசிரியர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்த போது பத்திரிகையாளர்கள் யாரையும் அழைக்கவில்லை. நிகழ்ச்சி நடந்த போது கலெக்டர் ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய போது ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் ஒரு அரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com