போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர் தற்கொலை

பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர் தற்கொலை
Published on

தற்கொலை

சென்னை ராஜாமுத்தையாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மனைவி சங்கரி. இவர்களுடைய மகன் ஹரிஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும், அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அபிராமபுரம் போலீசார், ஹரிஷை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றதாக தெரிகிறது. பின்னர் விசாரணை முடிந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் ஹரிஷ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஹரிஷை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் மீது புகார்

இந்தநிலையில் தனது மகனை விசாரணைக்கு அழைத்து, போலீசார் துன்புறுத்தியதாகவும், அதனால்தான் ஹரிஷ் மனஉளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஹரிஷின் தாயார் சங்கரி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் நேரடியாக சென்று புகாரின் மீது விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஹரிஷின் தற்கொலை, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேடடு விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பிறகுதான் ஹரிஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஹரிஷின் உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com