விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த கலசம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை

உடுமலை அருகே விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த கலசம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
Published on

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பகுதியில் சாமியப்பன் என்பவருக்கு 20 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பின் நடுவில் வேல் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான், விநாயகப் பெருமான் ஆகிய கடவுள்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சாமி சிலைகள் அருகே சிறிய வேல் உள்ளது. இந்த கோவிலில் சிறிய கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உண்டியல் எதுவும் இல்லை.

இங்கு எழுந்தருளியுள்ள சிவன் மற்றும் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் எதுவும் நடப்பது இல்லை. இதனால் கோவில் சிதிலமடைந்து, கதவு சேதம் அடைந்து கோவில் திறந்தே கிடக்கிறது.

இந்த கோவிலில் உள்ள கோபுரம் சிறியது என்றாலும் அந்த கோபுரத்தின் மீது 1 அடி உயரம் கொண்ட கலசம் வைக்கப்பட்டு இருந்தது. சாமியப்பன் தனது தோப்பிற்கு செல்லும் போதெல்லாம் கோவிலை ஒரு முறை வலம் வந்து, கோபுரத்தின் மீது உள்ள கலசம் இருக்கிறதா? என்று பார்ப்பார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோப்பிற்கு சாமியப்பன் சென்றபோது கோவில் கோபுரத்தில் கலசம் இருப்பதை பார்த்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சாமியப்பன், தனது தோப்பிற்கு சென்றார். பின்னர் தென்னந்தோப்பை சுற்றி பார்த்து விட்டு, கடைசியில் கோவில் அருகே வந்து அமர்ந்தார். அப்போது கோபுரத்தில் கலசம் இருக்கிறதா? என்று பார்த்தபோது கலசத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சாமியப்பன் அமராவதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது கோபுர கலசத்தை மர்ம ஆசாமிகள் சுத்தியலால் உடைத்து அதை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்த தோப்பு பகுதியை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், நள்ளிரவுநேரம் கோவிலுக்கு வந்து கோபுரத்தின் மீது ஏறி கோபுர கலசத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை போன கோபுர கலசத்தின் மதிப்பு குறித்து விசாரித்து வருகிறார்கள். கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com