திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பெருமாளும், தாயாரும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அனந்தராயர் மண்டபம் வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதி உலாவாக கொடிமரம் உள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. மாலையில் பெருமாள் மற்றும் தாயார் திருச்சிவிகையில் புறப்பாடு நடைபெற்று, கோவிலை வலம் வந்து தாயார் சன்னதியை வந்தடைந்தனர். பின்னர் பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

20-ந் தேதி தேரோட்டம்

இன்று(வெள்ளிக்கிழமை) பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை(சனிக்கிழமை) பெருமாள் மற்றும் தாயார் அனந்தராயர் மண்டபத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவேரி ஆஸ்தான மண்டபம் சென்றடைகின்றனர். மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறையை சென்றடைகிறார். அன்று இரவு கருட வாகனத்திலும், 16-ந் தேதி சேஷ வாகனத்திலும், 17-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடாகி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

இரவில் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார். 18-ந் தேதி இரவு நெல் அளவு கண்டருளி பெருமாள், தாயார் புறப்பாடு நடைபெறுகிறது. 19-ந் தேதி குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி காலை நடைபெறுகிறது. 21-ந் தேதி திருமஞ்சனம் கண்டருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22-ந் தேதி ஆளும் பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அறங்காவலர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com