மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பம்; ஆட்சியமைக்க வருமாறு சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாததால் பாரதீய ஜனதா பின்வாங்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பம்; ஆட்சியமைக்க வருமாறு சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை.

சிவசேனா முதல்-மந்திரி பதவியை கேட்டது. ஆனால் பா.ஜனதா விட்டுத்தர மறுத்து விட்டது. இந்த மோதலால் புதிய அரசு அமைப்பதில் முட்டுக்கட்டை உருவானது.

தற்போதைய சட்டசபையின் ஆயுள் காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டார். கவர்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் காபந்து முதல்-மந்திரியாக நீடிக்கிறார்.

சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, தனிப்பெரும் கட்சி என்ற வகையில், ஆட்சி அமைக்க முடியுமா? என கேட்டு பா.ஜனதாவுக்கு கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து பா.ஜனதா கட்சி, மும்பையில் நேற்று உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இதில் காபந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், சுதீர் முங்கண்டிவார், ஆஷிஸ் செலார், பங்கஜா முண்டே உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து அனைவரும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள், பா.ஜனதாவுக்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தங்களால் ஆட்சி அமைக்க இயலாது என கவர்னரிடம் தெரிவித்தனர்.

இந்த தகவலை சந்திரகாந்த் பாட்டீல் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பா.ஜனதா ஆட்சி அமைக்க இயலாது என கூறியதைத் தொடர்ந்து அடுத்தது என்ன? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களிடம் பேசியபோது, என்ன விலை கொடுத்தாவது மராட்டியத்தில் சிவசேனா முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்றும், இதை கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கூறுகையில், தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் கூறுகையில், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு கவர்னர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால், சிவசேனாவுக்கு அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார்.

ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்குள் தனக்கு தெரிவிக்குமாறு சிவசேனாவை கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com