டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி

மணப்பாறை அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி
Published on

மணப்பாறை,

புதுக்கோட்டை மாவட்டம் மங்கனூரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 33). இவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தனது நண்பர் பழனிச்சாமியை(37) அழைத்துக்கொண்டு காரில் சேலத்துக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து காரில் அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். குளித்தலை-மணப்பாறை சாலையில் மணப்பாறையை அடுத்த களத்துப்பட்டி அருகே வந்த போது, காரின் டயர் திடீரென வெடித்தது.

புளிய மரத்தில் மோதி விபத்து

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்ததால், காரில் வந்த இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உமாமகேஸ்வரி, இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும், மணப்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

2 பேர் பலி

ஆனால் வழியிலேயே பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பழனிச்சாமியும் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com