சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி

சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது. ஆனால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி
Published on

ஈரோடு,

கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்தே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் நடப்பதால் வெயிலின் உஷ்ணமும் அதிகமாக காணப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் ஊரடங்கின் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கைக்கு ஈரோடு திரும்பி வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தொடங்கி இருப்பதால் வெயிலின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

சூறாவளி

நேற்று பகலிலும் வழக்கத்தை போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. ஈரோட்டில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அடித்தது. இந்தநிலையில் இரவு 7 மணிஅளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்து ஈரோடு குளிர்ந்தது. மழை பெய்ததால் வீரப்பன்சத்திரம், சூளை, கருங்கல்பாளையம், பிரப்ரோடு, ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு, கொல்லம்பாளையம், சூரம்பட்டி வலசு உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. சூறாவளி காற்று வீசியதுடன் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகரமே இருள் சூழ்ந்ததைபோல மாறியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

கொடுமுடி- அந்தியூர்

இதேபோல் கொடுமுடியில் நேற்று இரவு 7.45 மணி அளவில் சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. பின்னர் 8 மணியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 8.30 மணி வரை நீடித்தது. ஊஞ்சலூர், தாமரைபாளையம், கொளாநல்லி, பாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.45 மணி முதல் 8.15 மணி வரை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அந்தியூரை அடுத்த கெட்டி சமுத்திரம் பகுதியில் 8 மணி முதல் 8.30 மணி பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com