

ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமைய்யா. விவசாயி. இவருடைய தோட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு லாரி சென்றது. கெலமங்கலம் அருகே சென்றபோது வைக்கோலில் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதையறிந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார். இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராம்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் மற்றும் லாரி எரிந்து சேதமானது. இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.