‘பிரேக்’ பழுதானதால் தடுப்புச்சுவர் மீது மோதிய லாரி ஏலகிரி மலையில் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரி மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் செல்ல முடியாததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
‘பிரேக்’ பழுதானதால் தடுப்புச்சுவர் மீது மோதிய லாரி ஏலகிரி மலையில் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஜோலார்பேட்டை,

ஆந்திர மாநிலத்திலிருந்து கடப்பா கற்களை ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை திருப்பத்தூர் வழியாக ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் பரத் (வயது 36) ஓட்டிச் சென்றார். லாரி அதிகாலை 4.30 மணியளவில் ஏலகிரி மலைப்பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவை கடந்து 9-வதாக உள்ள காரி வளைவை நெருங்கிக்கொண்டிருந்தது.

அப்போது திடீரென பிரேக் பழுதானது. 9-வது வளைவில் டிரைவர் பரத் லாரியை திருப்ப முயன்றபோது பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறிய லாரி தடுப்புச்சுவரில் மோதி சாலையின் குறுக்காக நின்றது. இதனால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏலகிரி மலையிலிருந்து திருப்பத்தூருக்கு அதிகாலையில் வழக்கம்போல் புறப்படும் அரசு பஸ் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. லாரி பழுதாகி நின்ற இடத்தில் வந்தபோது மேலும் செல்ல முடியாததால் அங்கேயே பஸ் நிறுத்தப்பட்டது. வெகு நேரம் ஆகியும் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சிகள் தொடங்காமல் இருந்தன.

இந்த நிலையில் காலை 8 மணியளவில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஏலகிரியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் மலையில் ஏறிக்கொண்டிருந்தது. அந்த பஸ்சும் 9-வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதாகி நின்ற இடத்தை கடக்க முடியாமல் அதே இடத்தில் நின்றது. இதனால் அந்த கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் பழுதாகி நின்ற லாரி டிராக்டர் மூலம் இழுத்து அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com