இரு தரப்பினர் மோதலில் வெட்டுக்காயம் அடைந்த அண்ணன்– தம்பிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நாகர்கோவிலில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் வெட்டுக்காயம் அடைந்த அண்ணன்–தம்பிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரு தரப்பினர் மோதலில் வெட்டுக்காயம் அடைந்த அண்ணன்– தம்பிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை லாலாவிளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி சுரேஷ் (34). ரமேசுக்கும் இளங்கடை புத்தன்குடியிருப்பை சேர்ந்த கவின் உள்ளிட்டோருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள கோவில் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதுதொடர்பாக ரமேஷ் எதிர்தரப்பினர் மீது போலீசில் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது வீட்டு வேலைகளை தம்பியை அழைத்து வந்து செய்தார். வேலை முடிந்து அவர்கள் இளங்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கவின் மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் அஜித், ஜெயக்குமார், சதீஷ் ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயம் கவின் உள்பட 4 பேரும் சேர்ந்து ரமேசையும், அவருடைய தம்பி சுரேசையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 பேருக்கும் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரமேஷ், சுரேஷ் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கவின் உள்பட 4 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் கவினும் கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சுரேஷ், ரமேஷ் மற்றும் அடையாளம் தெரிந்த ஒருவர் ஆகிய 3 பேர் சேர்ந்து தன்னையும், தனது நண்பர்கள் 2 பேரையும் கம்பி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com