அ.தி.மு.க.வில் இருவர் தலைமை சிறப்பாகவே உள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருவர் தலைமை சிறப்பாகவே உள்ளது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருவர் தலைமை சிறப்பாகவே உள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி
Published on

திருச்சி,

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அ.தி.முக.வில் அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும். ஒருவர் தலைமையில் கட்சியை கட்டுப்பாடுடன் கொண்டு செல்ல வேண்டும். வலியவர் பெரியவர் ஆகிவிடக்கூடாது. திறமையான, சுயநலமற்ற, மக்கள் பணியாற்றக்கூடிய மக்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு தலைவர் வேண்டும் என்றும், அமைச்சர் பதவிக்காக நான் இதை பேசவில்லை என்று மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா நேற்று முன்தினம் அதிரடியாக பேட்டி கொடுத்தார். இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்று குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் கேட்டபோது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி கட்சியும் ஆட்சியும் ஒருங்கிணைந்துதான் செயல்படுகிறது. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம்தான். வெற்றி பெற்றால் ஒரு மாதிரியும், தோல்வி அடைந்தால் வேறுமாதிரியும் பேசுவது சரியல்ல. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் தலைமையும் சிறப்பாகவே உள்ளது. இருவரது கூட்டு முயற்சியால் சீரிய முறையில் கட்சியும், ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

கட்சியும், ஆட்சியும் வலிவோடும், பொலிவோடும் திகழ்கிறது. தேர்தல் தோல்விக்காக அ.தி.மு.க. துவண்டு விடவில்லை. மீண்டும் எழுவோம். வருகிற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. விலை பேசுவதாக கூறப்படுகிறதே? என்ற கேட்டனர். அதற்கு வெல்லமண்டி நடராஜன், அது தவறான தகவல் என்று பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com