ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் பரபரப்பு

ஒலேநரசிப்புரா ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் பரபரப்பு
Published on

ஹாசன்,

டிரைவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயில்களை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஹாசன் டவுனில் இருந்து மைசூருவுக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஹாசனில் இருந்து மைசூருவுக்கு புறப்பட்ட பயணிகள் ரெயில் ஒலேநரசிப்புரா ரெயில் நிலையத்தின் அருகே வந்தது. அப்போது அந்த ரெயில் சிக்னலுக்காக ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மைசூருவில் இருந்து தாளகொப்பா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலேநரசிப்புரா ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு வந்தது. அந்த ரெயில் புறப்பட்டு செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால் பயணிகள் ரெயில் டிரைவர் நமக்கு தான் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டது என்று நினைத்து ரெயிலை இயக்கினார்.

இதேப்போல் தாளகொப்பா எக்ஸ்பிரஸ் ரெயிலின் டிரைவரும் ரெயிலை இயக்கினார். இதனால் 2 ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்தன. இந்த நிலையில் பயணிகள் ரெயில் எதிரே வருவதை கவனித்த தாளகொப்பா எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.

இதேப்போல் பயணிகள் ரெயில் டிரைவரும், எக்ஸ்பிரஸ் ரெயில் நின்ற இடத்திற்கு 60 அடி தூரத்திற்கு முன்பு ரெயிலை நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சிக்னலை தவறாக நினைத்து வந்து விட்டதாக பயணிகள் ரெயில் டிரைவர் கூறினார். இதனை தொடர்ந்து பயணிகள் ரெயிலை பின்நோக்கி எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் டிரைவரும் ரெயிலை பின்நோக்கி எடுத்து சிறிது தூரத்திற்கு பின்னால் சென்று தண்டவாளம் பிரியும் இடத்தில் நிறுத்தினார். இதையடுத்து தாளகொப்பா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 2 ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததை முன்கூட்டியே பார்த்து டிரைவர்கள் சாமர்த்தியத்துடன் செயல்பட்டு ரெயில்களை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com