பாதாள சாக்கடை குழி மூடி உடைந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது; 3 பேர் காயம்

தஞ்சையில் பாதாள சாக்கடை குழி மூடி உடைந்ததால் ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
பாதாள சாக்கடை குழி மூடி உடைந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது; 3 பேர் காயம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. தஞ்சை பூக்காரதெருவில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதேபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் அடிக்கடி நடக்கிறது. அவற்றை மாந கராட்சி ஊழியர்கள் சரி செய்துவிட்டு சென்றாலும் மீண்டும் கழிவுநீர் வெளியேறுகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் பாதாள சாக்கடை குழியின் மூடி உள்ளே இறங்கியும், ஒரு புறமாக சரிந்தும் காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்து எந்த நேரத்தில் குழிக்குள் இறங்குமோ என்ற நிலை இருந்து வந்தது. இந்த சாலையில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் காலை மற்றும் மதியம், மாலை நேரங்களில் ஆட்டோக்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதும், செல்வதும் என பரபரப்பாக காணப்படும்.

நேற்றுகாலை ஆட்டோவில் ஒரு பெண், 2 மாணவிகள் வந்து கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவின் சக்கரம், ஏற்கனவே உடைந்து இருந்த பாதாள சாக்கடை குழியின் மூடியில் ஏறியபோது திடீரென மூடி இரண்டாக உடைந்து குழிக்குள் விழுந்துவிட்டது. இதனால் ஆட்டோவின் சக்கரமும் குழிக்குள் சென்றதால் ஆட்டோ ஒருபுறமாக திடீரென கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் இருந்தவர்களை மீட்டதுடன், ஆட்டோவை நேராக நிமிர்த்தியும் வைத்தனர். இதன்பின்னர் பாதாள சாக்கடை குழிக்குள் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதுடன், விபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அந்த குழி மீது பெரிய கற்களை தூக்கி வைத்ததுடன், வேப்பமரக்கிளையை ஒடித்து குழியில் நட்டு வைத்தனர். இதனால் சாலையின் மையப்பகுதியில் திடீரென மரக்கன்று வளர்ந்து இருப்பதை போல் தெரிவதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் செல்கின்றனர்.

அதேநேரத்தில் இரவுநேரத்தில் வேகமாக வருபவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதாள சாக்கடை குழியை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com