தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
Published on

நெல்லை,

பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மத்திய தொழிற்சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான வங்கி ஊழியர் சங்கங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதே போல் எல்.ஐ.சி., தபால் துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் சந்தேகத்தில் இருந்தனர். ஆனால் நெல்லையில் நேற்று பஸ், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பயணிகளும் எந்தவித பிரச்சினையும் இன்றி பயணம் செய்தனர். பஸ் நிலையங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட எல்லையான புளியரையில் கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல் கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரக்கூடிய பஸ்களும் வரவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஏ.ஐ.சி.சி.டி.யு. உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. ஒருசில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் பண பரிவர்த்தனைகள் சற்று தேக்கம் அடைந்து உள்ளது. இந்த வேலை நிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) நடக்க உள்ளதால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் பணம் எடுப்பதில் பிரச்சினை இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள மின்சார வாரியம், கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்களில் 15 முதல் 20 சதவீதம் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் அரசு பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது.

90 சதவீதம் எல்.ஐ.சி. ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். 80 சதவீதம் அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டிய தபால்கள் தேங்கி உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ரெயில்கள், பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம்போல் ஓடின. கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com