30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த காய்கறி லாரி டிரைவர், கிளீனர் காயத்துடன் உயிர் தப்பினர்

தூத்துக்குடியில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி பாய்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த காய்கறி லாரி டிரைவர், கிளீனர் காயத்துடன் உயிர் தப்பினர்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் ஏற்றி வருவது வழக்கம். அதே போன்று நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.

இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் ராமலிங்கம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (27) என்பவர் வந்தார்.

பாய்ந்து விபத்து

இந்த லாரி நேற்று காலையில் தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தது. பின்னர் ஜெயராஜ் ரோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வதற்காக பாலத்தில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பாய்ந்து அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரி வளாக சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதனால் லாரியில் இருந்த காய்கறிகள் சிதறின. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த ரமேஷ்குமார்,லட்சுமணன் ஆகியோரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com