

நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து ஒரு மர்ம ஆசாமி வெளியே ஓடி வந்தார். இதையடுத்து முத்துசாமி திருடன், திருடன் என சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் அந்த ஆசாமியை கட்டி வைத்து, அடித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நல்லிப்பாளையம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அந்த மர்ம ஆசாமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த பாண்டியன்(வயது32) என்பதும், வீடு புகுந்து திருட முயன்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.