தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்

தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்
Published on

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீரானது கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் தினமும் ஒரு மணி நேரம் கிடைத்தது.

வீட்டு உபயோகத்திற்கான தண்ணீரை பஞ்சாயத்து ஆழ்துளை கிணறு மூலம் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் சோழங்கநல்லூர் கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே மோட்டாரை சீரமைத்து தரும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற குறைந்தபட்ச தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிதண்ணீர் இன்றி கடும் அவதியடைந்து வந்தனர்.

குடிநீர் கிடைக்காததால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை துறையூர் - சிறுகாம்பூர் வரை செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆன பிறகும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சி செயலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஆழ்துளை கிணற்றின் மோட்டார் பழுதை, கிராம மக்கள் சார்பில் சரிசெய்துகொள்ளுமாறும் அதற்கான ஊதியத்தை பஞ்சாயத்தின் மூலம் கொடுத்துவிடுவதாக கூறினார். இதை கேட்ட கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மண்ணச்சநல்லூர் மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வாத்தலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம், தற்போது, எங்களுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து வீட்டுக்கு 5 குடங்கள் மட்டும் கொடுக்கப்படுகிறது. அது குடிநீருக்கே போதாத நிலையில் மற்ற உபயோகத்திற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம். ஆகையால் உடனடியாக பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றின் மோட்டாரை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் மறியலை கைவிட போவதில்லை என கூறினர்.

அதற்கு அதிகாரிகள் தற்போது பழுதடைந்துள்ள மோட்டாருக்கு பதிலாக தற்காலிகமாக மோட்டார் வைத்து கிராம மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின் ஒரு வார காலத்திற்குள் புதிய மோட்டார் பொருத்தி நிரந்தரமாக தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் துறையூர் - சிறுகாம்பூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com