அரசு பஸ்சை வழி மறித்த காட்டுயானை கிராம மக்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றது

பில்லூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து காட்டுயானை நின்றது. அந்த யானை கிராம மக்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
அரசு பஸ்சை வழி மறித்த காட்டுயானை கிராம மக்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றது
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் காரமடையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணையை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காரமடை அல்லது ஊட்டிக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காரமடையில் இருந்து பில்லூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பில்லூரை அடுத்த அத்திக்கடவு கிராமம் அருகே பஸ் சென்றபோது திடீரென காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் அந்த பஸ்சை வழி மறித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

இதையடுத்து பஸ்சில் இருந்த குழந்தைகள் கூச்சல்போட்டனர். பின்னர் பஸ்சின் அருகே வந்த யானையை பார்த்து, பஸ்சில் இருந்த கிராம மக்கள், யானையை நோக்கி ராஜா குழந்தைகள் பயப்படுகிறார்கள் நீ போய்விடு என்று கூறினர். இதனை கேட்ட காட்டு யானை ஆதிவாசி மக்களின் சொல்லுக்கு கீழ்படிந்து சாலையோரம் சென்று நின்றது. பின்னர் அங்கிருந்த மண் மேட்டில் தந்தத்தால் குத்தியபடி சிறிது நேரம் நின்றுவிட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த காட்சிகளை பஸ்சில் இருந்த சிலர் செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் இதே பகுதியில் ஆதிவாசி இளைஞர் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com