வெண்ணாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

வெண்ணாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வெண்ணாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

தஞ்சையை அடுத்த கூடலூர் வெண்ணாற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

வெண்ணாற்றில் கூடலூர் தடுப்பு அணைக்கு மேல்புரம் 20 அடி ஆழத்திற்கு சுமார் 50 மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக மணல் அள்ளுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயத்திற்கு ஆற்றில் தண்ணீர் வரும் சமயம் வெண்ணாறு வடகரை உடைப்பு எடுத்து 30 கிராமங்கள் அழிந்து விடும் நிலை உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் அள்ளும் கும்பல் அரிவாள், இரும்பு கம்பிகளுடன் நடமாடுகிறார்கள். யாராவது மணல் கடத்தலை தட்டிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். ஏராளமான வீடுகளிலும் மணல் பதுக்குகிறார்கள். எனவே கலெக்டர் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

வல்லம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வல்லம் பேரூராட்சி பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வல்லம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் திருச்சி, தஞ்சை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால் வல்லம் பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.

ஆனால் இங்கு குறிப்பிட்ட நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலையில் சென்று விடுகின்றன. வல்லம் வரும் பயணிகளை புறவழிச்சாலையில் இறக்கி விட்டுச்செல்கின்றனர். இதனால் பயணிகள் 1 கி.மீ. தூரம் நடந்து வல்லம் பஸ் நிலையத்திற்கு வர வேண்டி உள்ளது. எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு புறவழிச்சாலையில் செல்லும் பஸ்களும் வல்லம் பஸ் நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த புதுக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தலித் மக்கள் அதிகம் வசித்து வரும் புதுக்குடி கிராமத்தில் உள்ள ஏரி புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கிரயமாக பெறப்பட்டுள்ளதாக கூறி சுற்றிலும் வேலி அமைத்தும், இதுவரை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தி வருகிறார்கள். அங்கு வளர்க்கப்படும் மாடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர் நிலை புறம்போக்குகளை யாரும் கையகப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த இடத்தை மீண்டும் புதுக்குடி கிராம மக்கள் அதாவது ஏற்கனவே வைத்திருந்தது போல் பயன்பாட்டில் வைத்திருக்க உத்தரவிடுவதோடு, பால்பண்ணை நிர்வாகத்தின் அத்துமீறலை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வருவாய்த்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com