

கடலூர்,
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக இருப்பவர் ராஜேந்திரரத்னூ. இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது கடலூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்த நரிக்குறவர்களுக்காக திருமாணிக்குழி மலையடிவாரத்தில் காசா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 28 வீடுகள் கட்டிக்கொடுத்தார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் அந்த வீடுகளில் நரிக்குறவர்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நரிக்குறவர் குடியிருப்பில் இருந்த மின்மோட்டார் கடந்த 2013-ம் ஆண்டு பழுதடைந்தது. அதனை பழுது பார்க்க கடலூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 2017-ம் ஆண்டில் நரிக்குறவர்கள் பலர் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி நகரப்பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் 28 குடும்பங்களில் 7 குடும்பத்தினர் மட்டுமே குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீடுகளை பூட்டி விட்டு கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர். இரவில் வீடுகள் பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், நள்ளிரவில் நரிக்குறவர் குடியிருப்புக்குள் புகுந்து, பூட்டிக்கிடந்த வீடுகளின் கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் டி.வி., மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை சூறையாடிச்சென்றனர். அதோடு நரிக்குறவர்கள் மீண்டும் குடியேற முடியாத படி வீடுகளின் ஜன்னல்களை உடைத்ததோடு, மின்இணைப்புகளை துண்டித்து மின்சார வயர்களையும் வெட்டி எடுத்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் திருவிழாவுக்கு சென்றிருந்தவர்கள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு வந்து பார்த்த போது வீடுகளில் இருந்த பொருட்களெல்லாம் சூறையாடப்பட்டு இருந்ததையும், மின்சார ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அவர்கள் நடுவீரப்பட்டு மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் மீண்டும் அங்கே தங்குவது பாதுகாப்பாக இருக்காது என்று கருதிய நரிக்குறவர்கள், தங்கள் வீடுகளை காலி செய்தனர். இதனால் கடந்த 3 மாதங்களாக நரிக்குறவர் குடியிருப்பு ஆளில்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.
அதனை காலி செய்து விட்டு வெளியேறிய நரிக்குறவர்கள் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் தங்கி உள்ளனர். இவர்களின் ஏக்கமெல்லாம் மீண்டும் தங்கள் சொந்த வீட்டில் சென்று தங்க வேண்டும் என்பதே ஆகும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.