நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
Published on

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு 105 அடியாகும். அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசன பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பவானிசாகர் அணை பெரும் பங்கு வகிக்கிறது.

நீர்மட்டம் சரிவு

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்டது. இதைத்தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதேபோல் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2-ந் தேதி வரை வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்று முன்தினம் 850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது. மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 924 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 101.34 அடியாக சரிந்தது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com