பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் பாசன விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்
Published on

தர்மபுரி,

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி கலெக்டர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை வந்தடையவில்லை. இதன் காரணமாக பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கரும்பு, பாக்கு, தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வழக்கமாக எப்போதும் சிறிதளவில் தண்ணீர் வெளியேறும் கால்வாயையும் அடைத்து வைத்து விட்டனர். எனவே பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நார்த்தம்பட்டி, கோவிலூர் பகுதிகளில் உள்ள ஏரிகளின் கரைகள் சேதமடைந்து உள்ளன. சேதமடைந்த கரைகளை மீண்டும் சீரமைக்க வேண்டும். வத்தல்மலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஈரோட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு குஜராத் மாநிலத்தில் இருந்தும் மாட்டு தீவனம் ஆவின்மூலம் பெற்று வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்படும் மாட்டு தீவனம் தரமானதாகவும், தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்கப்படும் மாட்டு தீவனம் தரம் குறைந்ததாகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தரம் குறைந்த மாட்டு தீவனங்களை பால் உற்பத்தியாளர்களிடம் திணிக்கும் போக்கு உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான மாட்டு தீவனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி பேசுகையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள், கோரிக்கைகள் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று கூறினார். கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com