

கோவை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் அன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 11 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் தங்க சங்கிலி வழங்கும் நிகழ்ச்சி கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 11 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், 7 பெண் குழந்தைகளுக்கு தங்க சங்கிலியையும் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாகதான் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த தண்ணீரை பெற்றுக்கொடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று முல்லை பெரியாறு, ஆழியாறு, சிறுவாணி ஆகிய அணைகளில் கேரளாவுடன் பிரச்சினை இருந்து வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீர் விலங்குகளுக்கும், மலைவாழ் மக்கள் குடிப்பதற்காக திறந்துவிடப்பட்டது என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம். உடனே அவருடைய உத்தரவின்பேரில் தமிழக தலைமை செயலாளர், கேரள தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு பேசினார். இதில் சிறுவாணி அணை குறித்து மட்டுமே பேசப்பட்டது. இதையடுத்து சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஆனால் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது என்று அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிலர் விவசாயிகளிடம் தவறாக கூறி அவர்களை திசை திருப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறு.
ஆழியாற்றில் இருந்து குடி நீருக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரள மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் இருமாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். தற்போது ஆழியாறு அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாலும், இந்த தண்ணீர் பி.ஏ.பி. திட்டம் மூலம் பாசனம் பெறும் பகுதிகளுக்கு போதாது என்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது தொடர்பாக விவசாயிகளிடம் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஆழியாறு அணையில் குறைவாக தண்ணீர் இருந்தபோது, முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரம்பிக்குளம், காடம்பாறை அணைகளில் இருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர் ஆழியாறு அணைக்கு திறக்கப்பட்டது.
தற்போது ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. எனவே பரம்பிக்குளம், காடம்பாறை அணைகளில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த கோரிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. எனவே பி.ஏ.பி. திட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விரைவில் பரம்பிக்குளம், காடம்பாறை அணைகளில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.