

கடலூர்,
கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 4-வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி 42 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 32 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், ஒரு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் உள்ளது. 7,244 கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 3,000 நெசவாளர்கள் முழுமையாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை, காரைக்காடு ஆகிய பகுதிகளில் பருத்தி ரகங்கள் நெசவு செய்யும் நெசவாளர்களும், புவனகிரி பகுதியில் பட்டு நெசவு செய்யும் நெசவாளர்களும் அதிக அளவில் உள்ளனர்.
மாவட்டத்தில் பெருவாரியாக கைத்தறி ரக லுங்கிகளே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பருத்தி சேலைகள், சட்டை துணிகள், கைக்குட்டை, கொசுவலை, பட்டு சேலைகள் ஆகிய ரகங்கள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கைத்தறி நெசவாளர்களுக்காக மாநில அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தண்டபாணி பேசினார். முன்னதாக அவர் கைத்தறி துணிகள் கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
விழாவில் கடலூர் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி அலுவலர் ரமேஷ், கைத்தறி நெசவாளர் பிரதிநிதி ராமலிங்கம் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.