

திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மூத்த நிர்வாகிகளை கவுரவித்தல், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, வணிகர்களின் குடும்பவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க கவுரவ தலைவர் ஜி.உமாபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.கணேசன், மாவட்ட செயலாளர் பி.முருகேசன், தஞ்சை மாநகர தலைவர் எஸ்.சேதுராமன், மாவட்ட பொருளாளர் ஏ.ரமேஷ், மாநில இணைச்செயலாளர் கே.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணைத்தலைவர் எம்.எஸ்.ராஜா வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து திருபுவனம் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் பி.முருகேசன், செயலாளர் எம்.இளங்கோவன், பொருளாளர் கே.கே.குமார் மற்றும் துணை, இணை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூ றியதாவது:-
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவைகளுக்கு காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம். உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசு தான் அன்னிய சக்திகள் உள்ளே வர காரணமாக இருந்தார்கள். அடுத்து வந்த பா.ஜ.க.வினர் நிலைமையை மாற்றுவார்கள் என்றால் காங்கிரசை விட தீவிரமாக அதே காரியத்தை செய்கின்றனர். வெளிநாட்டிற்கு உதவுவதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் வேலையாக உள்ளது. வருகிற 30-ந் தேதி காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட 70-வது ஆண்டில் காந்தி 70 என்ற பெயரில் சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் முக்கிய தீர்மானங்களை வணிகர்களும், நாட்டுமக்களும் கடைபிடிக்கவேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.