

மும்பை,
நவிமும்பை காமோட்டே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா மாத்ரே (வயது28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவிதா. இந்த பெண்ணுக்கு நிதேஷ் செக்டே என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இதை அறிந்த கிருஷ்ணா மாத்ரே மனைவியை கண்டித்தார்.
இந்தநிலையில், கணவர் கூறியதை பொருட்படுத்தாமல் கவிதா, மீண்டும் நிதேஷ் செக்டேவுடன் வெளியில் சென்றிருக்கிறார். அவர்கள் கண்டேஷ்வர் ரெயில் நிலைய பகுதியில் இருப்பதாக கணவர் கிருஷ்ணா மாத்ரேக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர் தனது சகோதரர் பாண்டுரங்கை அழைத்து கொண்டு அங்கு சென்றார். அப்போது அவர்கள் இருவரும் அங்கு ஜோடியாக இருந்தனர். இதைப் பார்த்ததும் கடும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா மாத்ரே மற்றும் அவரது சகோதரர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவிதாவையும், நிதேஷ் செக்டேவையும் சரமாரியாக குத்தினர். இதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணா மாத்ரே மற்றும் பாண்டுரங் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.