திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரகார மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகார மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரகார மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பலி
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைச் சுற்றிலும் கிரிப்பிரகார மண்டபம் உள்ளது. கடந்த 19-10-1974 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவரால் கட்டி திறக்கப்பட்ட இந்த மண்டபமானது பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கிரிப்பிரகார மண்டபத்தின் வடக்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதி சந்திக்கும் இடத்தில் சுமார் 70 அடி நீளத்துக்கு மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள் (வயது 43) கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கோவில் வளாகத்தில் மோர் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். கட்டிட இடிபாடுகள் தெறித்து விழுந்ததில் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் தெருவைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கந்தசாமி(74) ஆகிய இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கூச்சலிட்டனர். உடனே திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் களை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவை மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றினர். பின்னர் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்த பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் கோவில் நிர்வாகம், வருவாய் துறை, நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உள்ளடக்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக ஆய்வினை தொடங்குவார்கள். கிரிப்பிரகார மண்டபத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இறந்த பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், திருச்செந்தூர் கோவிலில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழ்ந்தது கிடையாது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கந்தசஷ்டி, மாசி திருவிழா நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com