லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்து வருபவர் விஸ்வநாத் ஷெட்டி. பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்திற்குள் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி புகுந்த துமகூருவை சேர்ந்த தேஜூராஜ் சர்மா என்பவர், நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதில், பலத்த காயமடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி குணமடைந்தார்.

நீண்ட நாள் ஓய்வுக்கு பின்பு கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி தான் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி பணிக்கு திரும்பினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது மதியம் 12.30 மணியளவில் ஒரு பெண் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு வந்தார். அந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ்காரர்கள் பரிசோதனை செய்தனர்.


அப்போது அந்த பெண் வைத்திருந்த பையின் உள்ளே கத்தி இருப்பதை கண்டு போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் விதான சவுதா போலீசார் மற்றும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மைசூருவை சேர்ந்த சோனியா ராணி என்று தெரியவந்தது. மேலும் லோக் ஆயுக்தாவில் அவர் தொடர்ந்திருந்த ஒரு வழக்கு எந்த நிலையில் இருப்பது என்பதை அறிந்து கொள்ள வந்ததாகவும் போலீசாரிடம் சோனியா ராணி கூறினார்.

ஆனால் அவர் என்ன காரணத்திற்காக கத்தியுடன் வந்தார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து சோனியா ராணி முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதையடுத்து, விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனியா ராணியை கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு கத்தியுடன் பெண் வந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com