“நாம் வளர்க்கும் மரக்கன்று நம் தலைமுறைக்கும் பயன்தரும்” அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

“நாம் வளர்க்கும் மரக்கன்று நம் தலைமுறைக்கும் பயன்தரும்” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
“நாம் வளர்க்கும் மரக்கன்று நம் தலைமுறைக்கும் பயன்தரும்” அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
Published on

சிவகாசி,

உலகளவில் சுற்றுச்சூழல் அதிகஅளவில் மாசுபட்டு வருவதால், அவற்றை தடுப்பதற்கு மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று உலக சுகாதார ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதனால் பருவ மழையின் அளவு குறைகிறது. இந்நிலையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சிவகாசி தொகுதியில் பல்வேறு கிராமங்களில் தனியார் அமைப்புகள் மூலமாகவும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

சில ஊராட்சிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்று வைத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆனையூர், பூவநாதபுரம், மண்ணுக்குமீன்டான்பட்டி போன்ற கிராமங்களில் மரக்கன்று நடுதல், பராமரிப்பு பணிகள் மிகவும் ஆர்வமுடன் செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஊராட்சிகளில் கிராம மக்களின் ஆர்வம் அதிகமாக உள்ளன. பூவநாதபுரம், மண்ணுக்குமீன்டான்பட்டி உட்பட சில கிராமங்களில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சிவகாசி அருகே விசுவநத்தம் கிராமத்தில் விசுவ வனம் அமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. மரக்கன்று நடும் விழாவை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்து பேசியதாவது:-

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பழக்கம் நம்மிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மரக்கன்று நடுவதிலும் அதை பராமரிப்பதிலும் அ.தி.மு.க. அரசு மிகவும் ஆர்வமுடன் செயலாற்றி வருகிறது.

சிவகாசி பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பழக்கம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நாம் வளர்க்கும் மரக்கன்று நம் தலை முறைக்கும் பயன்தரும். ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விசுவ வனம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம் மற்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com