

அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள கெட்டிச்சமுத்திரம் கூச்சிக்கல்லூர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அந்தப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறினார். பின்னர் அங்கு நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
இதனால் அங்கு கூட்டம் கூடியது. இதுபற்றி அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், தற்கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது சுப்பிரமணியன் போலீசாரிடம் கூறுகையில், எங்கள் பகுதிக்கு ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் வாரத்துக்கு 2 முறை மட்டுமே ஆற்றுநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு போலீசார், ஊராட்சி செயல் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் சுப்பிரமணியன் சமாதானம் அடையவில்லை. மேலும் அவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி குடிநீர் தொட்டியின் மேலே ஏறி வந்தால் தான், கீழே இறங்கி வருவேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி, சுப்பிரமணியத்தின் அருகே சென்றார். அப்போது சுப்பிரமணியன் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. அதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி அவரிடம் நைசாக பேசி, நள்ளிரவு 12 மணி அளவில் கீழே அழைத்து வந்தார். கீழே வந்தவுடன் போலீசார் சுப்பிரமணியத்தை எச்சரிக்கை செய்து, அவரின் வீட்டில் கொண்டு போய் விட்டனர்.