2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு 18 ஆயிரத்து 927 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வை 18 ஆயிரத்து 927 பேர் எழுதினார்கள்.
2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு 18 ஆயிரத்து 927 பேர் எழுதினர்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வை 18 ஆயிரத்து 927 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்கள் 5,538, சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக்காவலர் பணியிடங்கள் 340, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணியிடங்கள் 216 உள்பட 6,140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

இணையதளம் வழியாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விற்கு 2,300 பெண்கள் உள்பட 21 ஆயிரத்து 617பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 13 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்துத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பல தேர்வர்கள் காலை 8 மணி அளவிலேயே தேர்வு மையத்துக்கு வருகை தந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன் மற்றும் மின்னணு உபகரணங்கள் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்கள் தேர்வு மையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வை 16 ஆயிரத்து 932 ஆண்கள், 1,995 பெண்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 927 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 690 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வில் காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கவும், தேர்வு மைய பாதுகாப்பிற்கும் மாவட்டம் முழுவதும் 1,355 போலீசார் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்கள் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தேர்வு மையம் உள்பட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆய்வு செய்தார். தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல போதிய பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com