

திருச்சி,
திருச்சி வில்லியம்ஸ் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்திற்கு கடந்த 6-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வெளி சாலையை சேர்ந்த சுரேஷ் (வயது 21), பிரதீப்(38) ஆகியோர் வந்தனர். அப்போது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி சிவக்குமாரை சுரேஷ் சந்தித்து, அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிவதற் கான பணி நியமன ஆணையை கொடுத்தார். பணி நியமன ஆணை மற்றும் சுரேஷ், பிரதீப் ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிவக்குமார் இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலி பணி நியமன ஆணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையிலான போலீசார், சுரேஷ், பிரதீப்பிடம் விசாரணை நடத்தினர். இதில், சுரேஷ் கொண்டு வந்திருந்த பணி நியமன ஆணை போலியானது என்றும், அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் பேசி முதலில் ரூ.30 ஆயிரம் பெற்றுக்கொண்டு பிரதீப், போலியான பணி நியமன ஆணையை தயாரித்து கொடுத்தது, விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த ஆணை சென்னையில் தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.