கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் கைவரிசை: திருட்டு வழக்கில் கைதான பெண் போலீஸ் பணியிடை நீக்கம்

கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதான பெண் போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிரேசியா; அன்புமணி
கிரேசியா; அன்புமணி
Published on

மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே செண்பகராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் சம்பவத்தன்று நக்கனேரி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மதுபோதையில் இருந்ததாக கூறி, இவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மதன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளை கேட்டு, கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது, அது அங்கிருந்து திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மதன்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், கூடங்குளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

பெண் போலீஸ், கணவருடன் கைது

விசாரணையில், கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் கிரேசியா (வயது 29) தன்னுடைய கணவர் அன்புமணியுடன் சேர்ந்து, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த மதன்ராஜ் உள்ளிட்ட 3 பேரின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கிரேசியா, அன்புமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன், வெள்ளி அரைஞாண்கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பெண் போலீஸ் கிரேசியா, அன்புமணி ஆகிய 2 பேரையும் வள்ளியூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கிரேசியாவை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையிலும், அன்புமணியை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையிலும் அடைத்தனர்.

பணியிடை நீக்கம்

கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த வேறு சிலரது மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாகவும் தனிப்படையினர் தகவல்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடைய. திருட்டு வழக்கில் கணவருடன் கைதான பெண் போலீஸ் கிரேசியாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிரேசியா, நாகர்கோவில் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, அந்த உத்தரவு நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காதல் தம்பதி

கைதான பெண் போலீஸ் கிரேசியா, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தான்விளையைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

இவருடைய கணவர் அன்புமணிக்கு சொந்த ஊர், நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் சமத்துவபுரம் ஆகும். இவர் கன்னியாகுமரியில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தபோது, அங்கு சாப்பிட வந்த கிரேசியாவுடன் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அன்புமணி, முக்கூடல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

கிரேசியா வாரத்தில் 3 நாட்கள் போலீஸ் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னுடைய கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்து மோட்டார் சைக்கிள்களை திருடிச்செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையே.. மதன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளைக் கேட்டு, கூடங்குளம் போலீஸ் நிலைய எழுத்தரிடம் பேசிய ஆடியோ பதிவு வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com