

தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் ஒன்று தொங்கி கொண்டிருந்தது. வெள்ளை நிற கைக்குட்டையால் பொதிந்து, அதற்கு மேல் வெள்ளை நிற அட்டையை வைத்து மடித்து அந்த பார்சல் கட்டப்பட்டு இருந்தது.
அதன்மேல், இன்று கடைசி நாள் என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் 11-11-2020 என்ற நேற்றைய தேதி எழுதி, நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்ம பார்சல் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களையும் சிலர் பயத்தில் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
அந்த பார்சலில் எழுதப்பட்ட வாசகமும், அது கட்டி வைக்கப்பட்டிருந்த விதமும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு வந்து அந்த பார்சலை அகற்றினர். பின்னர் அதை திறந்து பார்த்தபோது அதற்குள் வெற்று அட்டை மட்டும் இருந்தது. இதனால், அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது. பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி விசாரணை நடத்தினார். விசாரணையில், நேற்று காலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த நபர் இந்த பார்சலை மரத்தில் கட்டி வைத்தது தெரியவந்தது.