4 ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா

வடபழனி முருகன் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா
Published on

வடபழனி முருகன் கோவில்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் பந்தக்கால் முகூர்த்தம், லட்சார்ச்சனையுடன் பங்குனி உத்திரவிழா தொடங்கியது. இதையொட்டி கடந்த 15-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. பங்குனி உத்திர விழாவின் சிறப்பு அம்சமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் தெப்பத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு...

முதல் நாள் வடபழனி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து புறப்பாடு செய்யப்பட்டு முருகன் கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து பின் தெப்பத்தில் எழுந்தருளுவார். வேதபாராயணம் நாதஸ்வர கச்சேரியுடன் தெப்பத் திருவிழா நடக்கிறது.

2-ம் நாள் சண்முகர், வள்ளி-தெய்வானை புறப்பாடும், 3-ம் நாள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

மின்னொளியில் ஜொலிக்கும் தெப்பம்

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடிகள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். தெப்பத்திருவிழாவுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மின்னொளியில் ஜொலிக்கும் தெப்பத்தில் எழுந்தருளும் வடபழனி முருகனை தரிசிப்பார்கள். இதனால் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி உள்பட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com