மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தங்கினார்.
மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேருவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது.

நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து நல்லாட்சி தந்தார். ஆனால் இப்போது மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி செயல்படுத்துகிறார்கள்.

நான் டெல்லி செல்ல விமான பயணத்துக்கு ரூ.22 லட்சம் செலவு செய்ததாகவும், அமைச்சர்களும் செலவு செய்ததாக கணக்குகூறி வருகிறார்கள். நாங்கள் எங்களது சொந்த வேலைக்கு டெல்லிக்கு செல்லவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் உறுப்பினர் நான். இதற்காக பல முறை டெல்லி சென்றுள்ளேன். இந்த கவுன்சிலில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தினால் 5 ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதனால் இப்போது இழப்பீடு தருகிறார்கள். இல்லாவிட்டால் புதுச்சேரி வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றிருக்கும். நாங்கள் டெல்லி செல்வதாக கூறிவிட்டு தாம்பரத்தோடு திரும்பி வரவில்லை. மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி வருகிறோம். அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.

டெல்லி சென்று ரூ.2 ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.500 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம், ரூ.44 கோடியில் சாகர்மாலா திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இதற்காக கடந்த 2 வருடத்தில் ரூ.22 லட்சம்தான் செலவு. ஆனால் மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சரின் அலுவலக டீ செலவு ஒரு வருடத்தில் ரூ.3 கோடி. நான் சொந்த வாகனத்திலேயே செல்கிறேன். சொந்த வீட்டில்தான் தங்குகிறேன்.

நமது கவர்னர் 2 வருடத்திற்கு மேல் புதுவையில் இருக்கமாட்டேன் என்று கூறினார். அவர் தனது வாக்கினை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன். அவரது முட்டுக்கட்டையினால் புதுவை மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கோப்புகளை அனுப்பினால் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பு கிறார். அவர் பிரதமர் மோடியின் ஏஜெண்டாக செயல்படுகிறார்.

வருகிற 29-ந்தேதி (நாளை) அவர் பெட்டி படுக்கையோடு டெல்லி செல்லவேண்டும். அதன்பின் புதுச்சேரியில் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், வருகிற 5-ந்தேதி புதுவையில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடப்பதாகவும், அதில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் கலந்துகொள்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், விஜயவேணி எம்.எல்.ஏ., புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், இளையராஜா, வீரமுத்து, வின்சென்ட்ராஜ், சரவணன், போத்ராஜ், சமூக நல ஆலோசனை வாரிய தலைவி வைஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் கடற்கரை காந்தி திடலில் உள்ள நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com