ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை

சென்னை தியாகராயநகரில் ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.30.35 கோடி மதிப்பீட்டில் தியாகராய நகரில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஆகாய நடைபாதை மாம்பலம் ரெயில் நிலையம் முதல் தியாகராயநகர் பேருந்து நிலையம் வரை அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக, ஆகாய நடைபாதை மூலம் மாம்பலம் ரெயில் நிலையத்தை, தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது முழுமை திட்டப் பணிகளில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆகாய நடைபாதை, மாம்பலம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே நடைமேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ரெயில்வே பார்டர் சாலை மற்றும் மேட்லி சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையம் வரை 600 மீட்டர் நீளத்தில், 4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு ரெயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகாய நடைபாதையின் வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு, வரைவு இறுதி திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கோரும் பணி தொடங் கப்படவுள்ளது. ஒப்பந்தப்பணி முடிந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com