

திருப்பூர்,
திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை முழுமைப்படுத்த மத்திய அரசு ரூ.200 கோடி நிதி உதவி வழங்கியது. இதற்கு உதவியாக இருந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்
இந்திய அளவில் தொழில்துறை அதிக முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த காலங்களில் நாம் பிற நாடுகளின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்பட்ட நிலை மாறி, நமது நாட்டின் வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் கண்டு வெளிநாட்டவர் பிரமிக்கும் நிலை உருவாகியுள்ளது. பின்னலாடை தொழில்துறை இருளடைந்து, தொழில் நலிவடையும் நிலையில் இருந்தது. தக்க சமயத்தில் மத்திய அரசு கைகொடுத்து இந்த தொழிலை பாதுகாத்துள்ளது. இது மத்திய அரசின் சிறிய பங்களிப்புதான். தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும்.
அதுவே, மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. நமது நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே, நமது மரியாதை உலகளவில் உயர்ந்து வருகிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் பிரதமர் மோடி பெரும் பங்காற்றி வருகிறார். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகும். தொழில்துறையினர் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறைக்கு தேவைகள் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
லஞ்சம், முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை
நாடு முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தல் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விளக்கி வருகிறோம். இதில் சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனையை பெற்றே ஜி.எஸ்.டி. யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் துறைகளுக்கு போடப்பட்டுள்ள வரி குறித்து தொழில்துறையினர், வியாபாரிகளிடம் எழும் சந்தேகங்கள் குறித்து கேட்டறிகிறோம். எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்துவோரின் கருத்துகளை பெற்று, அந்த கோரிக்கை மனுக்களை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். ஜி.எஸ்.டி. முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் லஞ்சம், முறைகேடுகள் எதற்கும் வாய்ப்பில்லை.
மலர் வெளியீடு
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்களை ஜி.எஸ்.டி. குழுவால் மட்டுமே கொண்டுவர முடியும். பருத்தி, செயற்கை நூல் இழைக்கும் விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஜாப் ஒர்க் நிறுவனங்களில் பல துறைகளுக்கு 18 சதவீதம் வரி குறைக்கப்படாமலே இருப்பதாக திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதை குறைக்க கவுன்சிலுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தின் முடிவில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஜாப் ஒர்க் நிறுவன சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் மனுக்களை கொடுத்தனர்.
முடிவில், திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு சார்பில் தொழில் வளர்ச்சி மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.
இதில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகசாமி, பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர்கள் காந்திராஜன், பரமசிவன், இணைச்செயலாளர்கள் ஜெயக்குமார், மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.