எனக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை: நகைக்கடை மோசடியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பேட்டி

நகைக்கடை மோசடியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும், எனக்கும், அந்த நகைக்கடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறினார்.
எனக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை: நகைக்கடை மோசடியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பேட்டி
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் ஒரு தனியார் நகைக்கடை நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடு என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பாது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் ஒரு நகைக்கடை நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில் எனது பெயரும் அடிபடுகிறது. இதே போல் பல்வேறு நிறுவனங்கள் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. சிலர் கைது செய்யப்பட்டாலும் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.

சிலர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை வசூல் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்த உண்மைகள் வெளிவர உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இந்த மோசடி வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாரோ ஒருவர், எனக்கு ரூ.400 கோடி கொடுத்ததாக கூறிவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. இந்த மோசடி வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

அந்த நகைக்கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரின் வங்கி கணக்கை முடக்க வேண்டும். நான் எந்த நிறுவனத்திடம் இருந்தும் ரூ.5 கோடியை பெறவில்லை.

எனக்கு சொந்தமாக சிறிய விமானம் உள்ளது, அது உள்ளது, இது உள்ளது என்று தவறான செய்திகளை பரப்புகிறார்கள். எனது மகன் சிறிய விமானத்தை பார்த்ததே இல்லை. எனக்கும், அந்த நகைக்கடை நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சமூகநீதி போராட்டக்காரன்.

இந்த மோசடியில் எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை. சில காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தேன். அதன் பிறகு என் மீது இவ்வாறு புகார்கள் வரத்தொடங்கியுள்ளன.

மந்திரி ஜமீர்அகமதுகான் எனது சகோதரர். நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை. அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ரோஷன் பெய்க் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com