அனல் மின்நிலைய உற்பத்தியை குறைத்திருக்கிறோம் அமைச்சர் தங்கமணி பேட்டி

காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக இருப்பதால் அனல் மின்நிலைய உற்பத்தியை குறைத்து இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
அனல் மின்நிலைய உற்பத்தியை குறைத்திருக்கிறோம் அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

நாமக்கல்,

நாமக்கல்லில் தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் கிராந்தி குமார் வரவேற்று பேசினார்.

இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 903 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 385 பயனாளிகளுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்களையும் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது.

தேர்தல் நேரத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் ஆட்சியாக தற்போதைய ஆட்சி உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஒரு மைல் கல் திட்டம். குமாரபாளையம், சேந்தமங்கலம் என 2 இடங்களில் கலைக்கல்லூரிகள் 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளன. 5 ஆண்டு காலத்தில் நாமக்கல் மாவட்டம் அடைந்த வளர்ச்சி போல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லை.

அதேபோல் 5 ஆண்டுகளில் 3 தாலுகாக்கள் கொடுத்த ஆட்சியும் ஜெயலலிதாவின் ஆட்சி தான். தற்போது மோகனூரும் தாலுகாவாக ஆக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். முதல்-அமைச்சர், பிரதமரை அழைத்து வந்து அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நாங்கள் நேரடியாக சென்று ஸ்கூட்டர்களை வழங்கி வருகிறோம்.

பணி இடமாறுதல் விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி கொள்முதல் விலை குறைந்து உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக இருப்பதால் அனல் மின்நிலைய உற்பத்தியை குறைத்திருக்கிறோம். இதேபோல் செலவுகளை முடிந்த வரையில் குறைத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com