காரணமின்றி என்னை கைது செய்தார்கள்: நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது - வசந்தகுமார் எம்.பி. குற்றச்சாட்டு

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகவும், காரணமின்றி என்னை கைது செய்ததாகவும் வசந்தகுமார் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். நாகர்கோவிலில் நேற்று வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காரணமின்றி என்னை கைது செய்தார்கள்: நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது - வசந்தகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
Published on

நாகர்கோவில்,

நாங்குநேரி சட்டசபை தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு நாகர்கோவில் வருவதற்காக பாளையங்கோட்டையில் இருந்து பணகுடி சாலையில் காரில் வந்துகாண்டு இருந்தேன். கலுங்கடி வந்தபோது போலீஸ் அதிகாரி ஒருவர் என்னை தடுத்து நிறுத்தினார். பின்னர் மெயின் ரோட்டில் அல்லது பாளையங்கோட்டைக்கு செல்லுங்கள் என்று கூறினார். எனவே நான் திரும்பி செல்ல தயாராக இருந்தேன். எனினும் என்னை போகவிடாமல் போலீஸ் அதிகாரி தடுத்தார். எனது வாகனத்துக்கு முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்களை நிறுத்திக் கொண்டு யாரிடமோ போனில் பேசி உத்தரவு வாங்கினார். அதன்பிறகு என்னை நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு 4 மணி நேரம் வரை எந்த காரணமும் இன்றி வைத்திருந்தார்கள்.

அதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி என் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். ஆனால் நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. என்னிடம் இருந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்யவும் இல்லை. ஆனால், என்னை எந்த காரணமும் இன்றி கைது செய்துள்ளனர்.

இந்த விஷயத்தில் தமிழக போலீஸ் ஜனநாயகத்தை மீறி நடந்து கொண்டது. நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு இல்லாததால் என்னை தடுத்து காங்கிரஸ் வெற்றியை தடுக்கலாம் என்று நினைத்தார்கள்.

எனவே எப்.ஐ.ஆர். நகல் வந்ததும் கட்சி சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்ததற்காக சபாநாயகருக்கு தகவல் அளித்துள்ளோம்.

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மோசமாக உள்ளன. மழை காலம் முடிந்ததும் 20 கோடி ரூபாய் செலவில் சாலைகள் பழுதுபார்க்கப்படும் என்று கூறினார்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. முன்னாள் மத்திய மந்திரியும் இங்கு இருக்கிறார். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலைகளை சீரமைக்க ஏன் அவர்கள் வலியுறுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com