

பவானிசாகர்,
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டதாகும். பண்ணாரியில் இருந்து திம்பத்திற்கு இடைப்பட்ட 10 கி.மீ., தூரத்தில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த பாதை என்.எச்., 209 எண் கொண்டதாக இருந்தது தற்போது என்.எச் 948 என்று எண் மாற்றப்பட்டுள்ளது. இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்படுவது அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களின் மொத்த எடையே 16.20 டன்தான் இருக்கவேண்டும். அதேபோல் பாரத்தின் உயரம் 3.80 மீட்டர்தான் இருக்கவேண்டும். அனைத்து கொண்டை ஊசி வளைவுகளிலும் வாகனங்கள் அதிகபட்சமாக 20 கி.மீ., வேகத்தில்தான் செல்லவேண்டும்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பண்ணாரி சோதனை சாவடி அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் அறிவிப்பு பலகையாகவே உள்ளது. இதை கவனிக்க பண்ணாரியில் ஆர்.டி.ஓ., சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர போலீஸ் சோதனை சாவடியும் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது திம்பம் மலைப்பாதையில் செல்லும் லாரிகளில் 30 முதல் 50 டன் வரை பாரம் ஏற்றப்படுகிறது. கோவை, ஈரோடு மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து பாரம் ஏற்றி பெங்களூரு செல்லும் லாரிகள் தர்மபுரி, ஒசூர் வழியாக செல்வதற்கான வாடகை பெற்றுக்கொண்டு பண்ணாரி வழியாக செல்கின்றன. போலீசார் இதை கண்டுகொள்வதில்லை என்று பஸ் டிரைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் கோரிக்கை பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது. மேலும் திம்பம் மலைப்பாதையில் அதிகபாரம் ஏற்றிவரும் லாரிகளை அதிகாரிகள் தெரிந்தே விடுவதுதான் தொடர் போக்குவரத்து பாதிப்புக்கு காரணமாகும். தற்போது திம்பம் மலைப்பாதையில் இருந்த குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர். ஆனால் அதிகபாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் பின்னால் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளதாலும், மற்ற லாரிகள் போட்டிபோட்டு முந்திசெல்வதாலும் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை டாரஸ் மற்றும் கண்டெய்னர் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்க கூடாது என்ற தீர்மானம் நடைமுறையில் இருந்தாலும், சோதனை சாவடியில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் இந்த லாரிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செல்கின்றன. மேலும் அனுமதியின்றி நீளமாக பாடிகட்டியுள்ள மட்டை லாரிகள் இந்த மலைப்பாதையில் அதிகமாக செல்கிறது.
அவ்வப்போது சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில் வழக்கு பதிவு செய்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாத நிலையே உள்ளது.
திம்பம் மலைரோட்டில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில் தற்போது கடும் குளிர் வீசுகிறது. போக்குவரத்து தடை ஏற்படும்போது நடு வனப்பகுதியில் பஸ் பயணிகள் நின்றுகொண்டு சாப்பிட உணவு இன்றி, தண்ணீர் இன்றி சரியான நேரத்திற்கு செல்லமுடியாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படுவது வேதனை தருகிறது.
இனியாவது அதிகாரிகள் அதிகபாரம் ஏற்றிவரும் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்காமல் போக்குவரத்து தடைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வழியாக செல்லும் பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.