குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து ஐதராபாத்தை சேர்ந்தவர் அடித்துக் கொலை

பீதர் அருகே, குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து ஐதராபாத்தை சேர்ந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து ஐதராபாத்தை சேர்ந்தவர் அடித்துக் கொலை
Published on

பெங்களூரு,

பீதர் மாவட்டம் அவுராத் தாலுகா முர்கியில் பள்ளி அருகே நேற்று முன்தினம் மாலையில் கார் ஒன்று நின்றது. புதிய கார் என்பதால் பதிவெண் பலகையில் எண்கள் குறிப்பிடப்படவில்லை. காரில் இருந்து 3 பேர் இறங்கினர். இதில் ஒருவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். இதை அங்கு நின்று பார்த்தவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். அதாவது, சாக்லெட் வழங்கியவர் உள்பட 3 பேரையும் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதினர்.

உடனடியாக, அவர்கள் ஒன்று திரண்டுவந்து 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் பயந்துபோன அவர்கள் பொதுமக்களிடம் இருந்து தப்பிஓடி, காரில் ஏறி வேகமாக சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இதையடுத்து, அங்கு சென்ற பொதுமக்கள் காரில் உள்ளே காயமடைந்து கிடந்த 3 பேரையும் மீட்டு சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கமலாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சிக்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

உடனடியாக, கூடுதல் போலீசார் அங்கு வந்து பொதுமக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால், அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் 2 பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்

போலீஸ் விசாரணையில், இறந்தவரின் பெயர் அஜாம் (வயது 26) என்பதும், படுகாயமடைந்தவர்களின் பெயர்கள் தல்ஹா இஸ்மாயில், சல்மான் என்பதும், இவர்கள் 3 பேரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஹண்டிகெரே கிராமத்தை சேர்ந்த நண்பர் பஷீர் என்பவரின் வீட்டுக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி தங்களிடம் இருந்த சாக்லெட்டுகளை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொடுத்த போது பொதுமக்களிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கமலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாமை அடித்துக்கொலை செய்ததாக 30 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முர்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறிய நிலையில், கர்நாடகத்தில் ஏற்கனவே ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என மேலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com