திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா தனியார் விடுதிகள், மடங்களில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களில் தனியார் விடுதிகள், மடங்களில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா தனியார் விடுதிகள், மடங்களில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கொரானா ஊரடங்கு காரணமாக கந்தசஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிகாரத்தில் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருகல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெறும் 20 மற்றும் 21 ந் தேதிகளில் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பகலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் வளாகத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. ப்ரவின்குமார் அபிநவ், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தையும், கடற்கரை, கோவில் வளாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கோவில் காவடி மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனியார் விடுதிகளில்...

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 20-ந் தேதி நடக்கும் சூரசம்ஹாரம் மற்றும் 21-ந் தேதி நடக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆண்டு தோறும் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி இந்தாண்டு தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் கோவில் கிரி பிரகாரத்தில் நடக்கிறது. தற்போது தினசரி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 20-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே அன்றைய தினம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், அந்த 2 நாட்களும் திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் சமுதாய மடங்களில் பக்தர்கள் தங்குவதற்கும் அனுமதி கிடையாது. எனவே 19-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் விடுதிகளில் யாரையும் தங்க அனுமதிக்காமல், விடுதிகளில் தங்கி இருப்பவர்களை வெளியேற்றி ஒத்துழைப்பு தரும்படி விடுதி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்றைய தினம் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து யாரும் வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், முத்துராமன், ராதிகா, செல்வி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com